நான் நல்லவளா? கெட்டவளா?

By Vasuki R

இன்னதென்று இன்னாரென்று
பளிச்சென்று பேசுவதில்
எவருக்கெல்லாம் என்னென்ன
பிரச்சனைகள் தான்
நிகழ்ந்து விடுகின்றது?

சரி இக்கட்டான நிலையோ..
எவருக்கோ இதனால் துயரோ..
எனில், வேண்டுமானால்
தொண்டைக்குள் ஒரு வடிகட்டி
வைத்துக் கொள்ளலாம்..

கேள்வி என்றாலே
ஆயிரம் கணக்குகள் போட்டு
பின்விளைவு பக்கவிளைவு ஆராய்ந்து
கச்சித பதில் தான்
கொடுக்க வேண்டுமா என்ன?

சில சமயம்
அவர்கள் சரிதான்
நமக்குத் தான்
புத்திசாலித்தனம் போதாது
என்றெல்லாம் எண்ணம் வருகின்றது..

ஆனால், சில சமயம்
அருவருப்பாய் தெரிகின்றது
உண்மையில்லா உள்ளம்
சுயநலக் கூட்டம்
என்றும் தோன்றுகிறது..

சரி! சாமர்த்தியமோ சுயநலமோ..
நமக்கு தேவையான அளவு
இல்லை எனினும்
அப்படியொன்றும் பெரிய துயரை
சந்தித்ததாய் நினைவில்லை..

இறுதியாய், இது தான் தோன்றுகின்றது
என்னதென்று ஏதென்று அப்படியே பேசும்
என்னை போல் சிலர்கள்
கொஞ்சம் பொறாமை உள்ள
நல்ல மனிதர்கள் தான் !


Leave a comment